இலங்கை பத்திரிகை பேரவைக்கு மாற்றாக, ஊடகத்துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் முன்மொழியப்பட்ட ஊடக ஆணைக்குழு அமைப்பை நிறுவுவதற்கான ஆரம்பகட்ட கருத்துத் திட்டப் பத்திரம் அண்மையில் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் டாக்டர் கௌஷல்யா ஆரியரத்னாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த கருத்துத் திட்டப் பத்திரம், மூத்த ஊடக வல்லுநர்கள், நிர்வாகிகள், தொடர்பியல் மற்றும் ஊடகக் கல்வியியல் அறிஞர்கள், சட்ட நிபுணர்கள் உள்ளிட்ட பத்து வள நபர்களைக் கொண்ட குழுவினால் தயாரிக்கப்பட்டது. இது அமைச்சக அரங்கில், இலங்கை பத்திரிகை பேரவை தலைவர் பிரியன் ஆர். விஜேபண்டார அவர்களால் அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.
வரைவுக் குழு உறுப்பினர்கள், அமைச்சக அதிகாரிகள் மற்றும் பல ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.
அந்நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் டாக்டர். கௌசல்யா ஆரியரதன கூறியதாவது:
“நீண்ட காலமாக, ஊடகத்துறையில் ஏதோ ஒரு கட்டுப்பாட்டு அமைப்பு தேவை என பொதுமக்களும் சிவில் சமூக அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றனர். அரசியல் தலையீடு இல்லாத ஒரு ஆணைக்குழு அவசியம் என்பதையும் பல தரப்பினர் பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுத்துக்காட்டியுள்ளனர். எமது கொள்கை அறிக்கையிலும் ‘சுயாதீன ஊடக ஆணைக்குழு’ ஒன்றை நிறுவும் உறுதிமொழி இடம்பெற்றுள்ளது.
முன்னர், ஊடக அமைப்புகளே கருத்துச் சுதந்திரம் மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை பாதுகாத்துக் கொண்டே, சில ஒழுங்குமுறை முறைகள் எவ்வாறு அமையலாம் என்பதைக் குறித்து கலந்துரையாடி அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. நானும் முன்பு ஊடக அமைப்புகளுடன் இணைந்து இவ்விவகாரத்தில் தலையீடுகள் செய்துள்ளேன்.
இப்போது முன்னேறுவதற்கான ஒரு வாய்ப்பு எமக்கு கிடைத்துள்ளது. ஆகையால், ஊடகத் தொழில்முனைவோர், ஊடக அமைப்புகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஊடகத்துறையின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக இந்த முயற்சியை முன்னெடுக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.”
இந்த கருத்துத் திட்டப் பத்திரத்தை தயாரித்த குழுவின் உறுப்பினர்கள்:
பிரியன் ஆர். விஜேபண்டார – தலைவர், இலங்கை பத்திரிகை பேரவை
ஜகத் லியனகே ஆராச்சி – வழக்கறிஞர்; உறுப்பினர், தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு
டாக்டர் மனோஜ் ஜினதாச – தலைவர்/மூத்த விரிவுரையாளர், Department of Mass Communication, களனிப் பல்கலைக்கழகம்
அசோக டயஸ் – மூத்த ஊடகவியலாளர்/வருகை விரிவுரையாளர்
மண்டனா இஸ்மையில் – இதழாசிரிய ஆலோசகர், The Sunday Morning உறுப்பினர், தேசிய ஊடகக் கொள்கை வரைவுக் குழு
நிரோஷன தம்பவிட்ட – பத்திரிகை ஆணையாளர், இலங்கை பத்திரிகை பேரவை
நிவந்தி திலகரத்னே – சட்ட அதிகாரி, Associated Newspapers of Ceylon Limited
ஹில்மி மொஹம்மட் – முன்னாள் துணை இயக்குநர், அரசாங்க தகவல் திணைக்களம்
கணபதிப்பிள்ளை குமணன் – சிரேஷ்ட புகைப்பட ஊடகவியலாளர் (செயற்பாடுகளில் பங்கேற்பதில் சிரமம் இருப்பதாகக் கூறி பின்னர் விலகினார்)
லசந்த டி சில்வா – மூத்த ஊடகவியலாளர்/ஒழுங்குபடுத்துநர், சுதந்திர ஊடக இயக்கம்
பிரியந்த வேதமுல்ல – தலைவர், சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு
(மேலும், ஜகத் லியனகே ஆராச்சி, மண்டனா இஸ்மையில் மற்றும் நிவந்தி திலகரத்னே ஆகியோர், இந்த கருத்துத் திட்டப் பத்திரம் அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்ட நேரத்தில் மேற்குறிப்பிட்ட பதவிகளில் இல்லை என்பதையும் குறிப்பிடத்தக்கது.)


